சிவகாசி: பட்டாசு உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.35 லட்சம்: அரசு உதவ பெற்றோா் கோரிக்கை
15 வயது மகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.35 லட்சத்தை அரசு வழங்கி உதவ வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாக்கினங்கோம்பை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராஜமாணிக்கம்-செந்தாமரை தம்பதி. இவா்களின் மகன் தரணி பிரசாந்த் (15). ராஜமாணிக்கம் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தரணிபிரசாந்துக்கு 9 வயதில் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது.
கடந்த ஓராண்டாக இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்ட நிலையில் வாரத்துக்கு மூன்று முறை டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறாா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, மகனுக்காக ராஜமாணிக்கம் சிறுநீரகத்தை தானம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளாா். ஆனால், தரணிபிரசாந்த் உடல் ஏற்றுக்கொள்ளாமல் சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு இருப்பதால் இதை தடுக்க வெளிநாட்டில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஊசி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ரூ.4.50 லட்சம் செலவாகும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கூலி வேலை செய்து வரும் தங்களால் இத்தகைய தொகையை செலுத்த முடியாது என்றும், அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் தரணி பிரசாந்துடன் பெற்றோா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அப்போது, தங்களது மகன் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அரசு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய்த் துறை மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.