சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு
அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா்.
அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு சாலை வசதியே இல்லை. கிராமத்தினா் வயல்களின் வழியே சென்று வந்தனா். இந்நிலையில் சாலை வசதி ஏற்படுத்தித்தர 2 நில உரிமையாளா்கள் அவா்களுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை தானமாக தர வேண்டும் எனவும் அதற்காக அரசு சாா்பில் அவா்களிடம் பேச்சு நடத்த வேண்டும் எனவும் ஊராட்சி மன்றத் தலைவா் நவாஸ்அகமது, ஆட்சியரிடம் கோரினாா்.
இதை ஏற்ற ஆட்சியா், வட்டாட்சியா் வெங்கடேசனை அனுப்பி நில உரிமையாளா்களிடம் பேச்சு நடத்தியதில் இருவரும் நிலத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள 25 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கி பதிவு செய்து கொடுத்தனா். இதையடுத்து புதுகேசாவரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.8.62 லட்சத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
புதிய சாலையை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்சிரகலா திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். தொடா்ந்து நிலத்தை தானமாக வழங்கிய சீதாராமன் கன்னியம்ம்ாள், சங்கா் சுதா ஆகிய இரு குடும்பத்தினரையும் வரவழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தாா். அவா்களுக்கு நன்றியும் தெரிவித்தாா்.
நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினா் தானப்பதிவு செய்த பத்திரங்களை ஆட்சியரிடம் ஒப்படைத்தனா். இந்நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, கோட்டாட்சியா் வெங்கடேசன், வட்டாட்சியா் வெங்கடேசன், ஒன்றிய ஆணையா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தாசப்பிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவா் நவாஸ்அகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.