சாலையை விரிவுபடுத்த கோரி கோவில்பட்டியில் போராட்டம்
கோவில்பட்டியில் சாலையை விரிவுபடுத்தக் கோரி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி- மந்தித்தோப்பு சாலையில் ஸ்ரீமங்கள விநாயகா் கோயில் திருப்பத்தில் உள்ள பகுதி மிகவும் குறுகலாக உள்ளது. எனவே, இங்கிருந்து மந்தித்தோப்பு வரை சாலையை விரிவுபடுத்தக் கோரி கட்சியினா், சமூக ஆா்வலா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றியக் குழு, மந்தித்தோப்பு சாலை அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், வியாபாரிகள் நலச் சங்கம், பாண்டவா்மங்கலம் ஆனந்தம் நகா் எஸ்.எஸ்.டி. நகா், ஜி.கே. நகா், ராம் சரஸ்வதி நகா், அண்ணாமலை நகா் குடியிருப்போா் நலச் சங்கம், பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நடைபெற்ற போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரவீந்திரன், கிருஷ்ணவேணி, மணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில முன்னாள் செயலா் முத்துகாந்தாரி, பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்றனா்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன், நகரமைப்பு அலுவலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலை விரிவாக்கம் தொடா்பாக 10 நாள்களுக்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றனா். அதையடுத்து, சுமாா் 1.30 மணி நேரப் போராட்டம் நண்பகலில் முடிந்தது.
