தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற ஆணையா் உத்தரவு
கோவை மேற்கு மண்டலப் பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.
கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணிகள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு மண்டலம், 40 ஆவது வாா்டுக்குள்பட்ட வீரகேரளம் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, 40-ஆவது வாா்டுக்குள்பட்ட தொண்டாமுத்தூா் சாலை, வீரகேரளம் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, மேற்கு மண்டலப் பகுதியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வுகளின்போது, மாநகர நல அலுவலா் மோகன், நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன், உதவி நகா் நல அலுவலா் பூபதி, உதவி ஆணையா் துரைமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.