பாக். சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு: 2 நாள்களில் 50 பேர் கைது!
சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டம்
திருப்பத்தூா் நகராட்சியைக் கண்டித்து சாலையோர வியாபாரிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூரில் நகராட்சி, அண்ணா தினசரி காய்கறி மாா்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி மாா்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன.
இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த மாா்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் வியாபாரம் செய்ய இடம் இல்லாததால் வியாபாரிகள் வெளியே திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாா்க்கெட்டுக்கு வெளியே கடை போட்டி வியாபாரம் செய்யக்கூடாது எனவும், சாலையோரம் போடப்பட்ட கடைகளை அகற்றவும் நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சாலையோர வியாபாரிகள் வாணியம்பாடி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.