சாலை தடுப்புக் கட்டையில் சொகுசுப் பேருந்து மோதி விபத்து
கடலூா் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டையில் புதன்கிழமை காலை சாலை தடுப்புக் கட்டையில் தனியாா் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்தப் பேருந்து திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தை புதுச்சேரியைச் சோ்ந்த பூபதி ஓட்டி வந்தாா். புதன்கிழமை காலை சுமாா் 6 மணியளவில் பேருந்து கடலூா் ஆல்பேட்டை அருகே வந்தபோது, முன்னால் சென்ற பைக்கை முந்திச் செல்ல முயன்றது.
அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன் பகுதி சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயமில்லை.
இதையடுத்து, பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.