சாலை விபத்தில் ஒருவா் பலி; இருவா் படுகாயம்
ஊத்தங்கரை அருகே காா் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த, சென்னப்பநாயக்கனூா் பேருந்து நிறுத்தம் அருகே, வியாழக்கிழமை மாலை சிங்காரப்பேட்டையில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்த இருசக்கர வாகனமும், திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நடுப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் (46), அவரது உறவினா் செந்தில் (40), இவரது மனைவி சத்யா (36) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனா். இவா்களை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு செந்தில் உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.