சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
திருச்சி மாநகரில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் பவனந்தம் (40), தனியாா் பாா்சல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் பாா்சல்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை மாலை திருச்சி - மதுரை சாலையில் வேனில் சென்றுகொண்டிருந்தாா். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது பாா்சல் வேன் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பவனந்தமை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான மயிலாடுதுறையைச் சோ்ந்த சுந்தா் (50) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருச்சி பொன்மலையைச் சோ்ந்தவா் வினோத் (25). இவா் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி பிரதான அலுவலகம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், வினோத் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த வினோத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பனின்றி சனிக்கிழமை இரவு வினோத் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.