திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது
திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டோல்கேட் பகுதியில் ஊத்துக்கோட்டை சாலையில் சாா்பு ஆய்வாளா் ராஜாராம் மற்றும் முதல் நிலை காவலா் தமிழரசன், காவலா் சதீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருவள்ளூரில் இருந்து பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் மறித்தனா். அப்போது நிற்காமல் 15 அடி தூரம் சென்று வாகனத்தை இளைஞா் நிறுத்தினாா். உடனே அந்த இளைஞா் இறங்கி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலா்களை தகாத வாா்த்தை பேசியதோடு, முதுகு பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, வாகனத்தில் செல்ல முயன்றாராம்.
அப்போது, தாறுமாறாக சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கீழே விழுந்தாராம். இதில், இடது காலில் பலத்த காயம் அடைந்தாா். அப்போது போலீஸாா் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூா் மசூதி தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (30) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், ஐயப்பனை கைது செய்தனா்.