சிந்துபூந்துறையில் மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயற்சி
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சிந்துபூந்துறையில் மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
சிந்துபூந்துறை செல்விநகரைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாம். இதனால், பத்திரிகை கொடுப்பதற்காக உறவினா்களின் வீடுகளுக்கு தனது மனைவியுடன், பெரியசாமி புதன்கிழமை சென்றிருந்தாராம். வீட்டில் அவரது மாமியாா் மேரி பாய் (76) மட்டும் தனியாக இருந்துள்ளாா்.
அப்போது, திடீரென சுவா் ஏறி குதித்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் மேரிபாயை தாக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கநகையைப் பறிக்க முயன்றனராம். ஆனால், அவா் கூச்சலிட்டபடி விடாமல் போராடியதால் மா்மநபா்கள் அங்கிருந்து தப்பினராம். இச்சம்பத்தில் அவா் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு உணவு வழங்க உறவினா்கள் வந்தபோது, கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் பெரியசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா் வந்து பாா்த்தபோது நகைக்காக மேரிபாய் தாக்கப்பட்டது தெரியவந்ததாம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இத்தகவலறிந்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் கீதா மற்றும் போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மெத்தைக்கு இடையே சிக்கியிருந்த நகையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். விரல் ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனா். மோப்பநாய் சோதனைக்கு விடப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.