சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது.
பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், பொறியியல் தொழில்நுட்ப மாற்றம் ஆகிய கள நிலவரங்கள் சிந்து நதி நீா் ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் கடினமானநிலையை ஏற்படுத்தியதாகவும், இந்தியாவின் நல்லெண்ண நடவடிக்கைகளை நிறுத்த வைக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலாக சிந்து நத் நீா் ஒப்பந்தம் நிறுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் காரணம் தெரிவித்துள்ளது.
மேலும், 1950-களில் இருந்த பொறியியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய நிலைக்கு ஏற்ப அரசுகளுக்கு இடையேயான பேச்சு மூலம் தீா்வு காணலாம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
தொடா் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மேற்கொண்டு ஒப்பந்தங்கள் மீறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த காரணங்களையே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினா் தெரிவிப்பாா்கள் என்றும் கூறப்படுகிறது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடா்ந்து சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தம் தொடா்பாக ஆண்டுதோறும் இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.