நெல்லை: காதல் மனைவியைக் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர்; பகீர் வாக்க...
சின்னமனூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரி சின்னமனூரில் விவசாய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சின்னமனூா்- மாா்க்கையன்கோட்டை சாலையிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞரணி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேனி மாவட்டத் தலைவா் சிவனாண்டி தலைமை வகித்தாா். செயலா் பிரான்சிஸ் சேவியா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் சண்முகம் கலந்து கொண்டாா். அதில், தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கடந்த காலங்களில் எண்ணெய் உற்பத்தி இல்லை.
எனவே வெளிநாட்டிலிருந்து இறங்குமதி செய்யப்பட்ட பாமாயில் நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை இந்த நடைமுறை அமலில் உள்ளது.
இதனிடையே வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யும் வகையில் எண்ணெய் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுவிட்டோம். மேலும் பாமாயிலால் மனித உடலுக்கு எந்தவித நன்மையும் இல்லை. எனவே, நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், சின்னமனூா், கோம்பை, கூடலூா் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.