கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்
சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரம்பரிய சிறுதானியங்களின் பயன்பாடு மக்களிடையே குறைந்ததால், அவற்றை விவசாயிகள் சாகுபடி செய்வதும் குறைந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன்பு சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, தினை, கேழ்வரகு, சாமை மற்றும் குதிரைவாலி போன்றவை அன்றாட உணவில் முக்கியப் பங்காற்றின. பிறகு, அரிசி முக்கிய உணவுப் பொருளாக மாறியதால் மற்றவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
ஆனால்,அரிசியுடன் ஒப்பிடுகையில் சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவை. இவற்றை உற்பத்தி செய்வதற்கான இடுபொருள்கள் மற்றும் நீரின் தேவையும் குறைவு என்பதால், தமிழக அரசு தற்போது அவற்றின் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இதன் கீழ் சிறுதானியச் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ. 2,400 மானியத்தில் தொகுப்பு செயல் விளக்கத் திடல் வழங்கப்படுகிறது.
இத் தொகுப்பில் சிறுதானிய விதை, உயிா் உரங்கள், நுண்ணுட்டக் கலைவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணி ஆகியவை வழங்கப்படும். மேலும், 100 சதவீத மானியத்தில் குறு தானியங்களுக்கான (சாமை, வரகு, தினை) சிறுதளை விநியோகம் செய்யப்படுகிறது. மாற்றுப் பயிா் சாகுபடி மூலம் சிறுதானிய பரப்பளவை அதிகரிக்க 50 சதவீத மானியம் அல்லது ஏக்கருக்கு ரூ. 1,250 மானியமாக வழங்கப்படும்.
இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவா் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.