சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது: ஆா்பிஎஃப் அதிரடி
வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டல், களிமண், மண் ஆகிய கனிமங்கள் எடுக்க வாய்ப்புள்ள - பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஏரிகளும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 536 ஏரி, குளங்கள் என மொத்தம் 602 நீா்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, விவசாய நிலத்தை மேம்படுத்த, மண் பாண்டம் செய்ய மற்றும் பொது பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை எடுக்க இணையதளத்தில் தங்களது விவரத்தைப் பதிவு செய்து, வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
மேலும், வியாபார நோக்கத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அனுமதி பெறுவதற்கான இதர நிபந்தனைகள் மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, மேற்கண்ட இணையதளத்தில், அல்லது புவிவியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.