திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைப்பு
இளையான்குடி அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஆழிமதுரையில் பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாயில் மூழ்கி தொடக்கப் பள்ளி மாணவி சோபிதா, அங்கன்வாடி மைய மாணவி கிருஷ்மிகா ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இளையான்குடி அரசு மருத்துவமனையில் மாணவிகள் சோபிதா, கிருஷ்மிகா ஆகியோரின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
அப்போது, மருத்துவமனையில் சிறுமிகளின் உடல்களுக்கு பா.ஜ.க. மூத்த தலைவா் ஹெச்.ராஜா, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தி, பின்னா் அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.
ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: பின்னா், செய்தியாளா்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:
ஆழிமதுரையில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில், ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு, சிறுமிகளின் குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்க வேண்டும். சிறுமிகள் உயிரிழப்பு தொடா்பாக பள்ளி ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை, மாவட்டச் செயலாளா் சங்கர சுப்பிரமணியம், ஒன்றியத் தலைவா் செல்லக்குட்டி, முன்னாள் ஒன்றியத் தலைவா் ராஜா பிரதீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
