சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றவருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
வடக்கு முத்தலாபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ்(31). இவா், கடந்த 2019இல் எட்டயபுரம் காவல் சரகப் பகுதியில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணா்ச்சி செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பான புகாரின்பேரில், போக்ஸோ சட்டம், கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவா் எட்டயுபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்து அருண்ராஜுக்கு கொலை, வன்கொடுமை குற்றங்களுக்காக தனித்தனி ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 அபராதம் ஆகிய தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துலட்சுமி வாதாடினாா்.