தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.
சிவகாசியில் பசுமை மன்றம் சாா்பில் பெரியகுளம், சிறுகுளம் கண்மாய் ஆகியவை சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில், சிவகாசிநகரில் உள்ள தெருக்களில் மாநகராட்சிக்கு சொந்தமாக 31 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தக் கிணறுகள் அனைத்தும் குப்பைகள் கொட்டப்பட்டும், சுவா் இடிந்து பாழடைந்த நிலையில் இருந்தன. இந்தக் கிணறுகளை சுத்தப்படுத்தி, அந்தத் தெருவில் உள்ள வீடுகளின் மாடியில் குழாய்களை இணைத்து கிணற்றில் மழைநீா் சேமிக்க திட்டமிட்டது.
இதையடுத்து, மாநகராட்சியில் கிணறுகளை சுத்தப்படுத்தவும், மழைநீா் சேமிக்கவும் மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டது. தொடந்து பட்டித் தெரு, பி.கே.எஸ். தெரு, முஸ்லிம் தெரு, ஜக்கம்மாள் கோயிலின் பின்புறமுள்ள கிணறுகளில் மழைநீரை சேமிக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன. சிவகாசியில் உள்ள 31 கிணறுகளில் தற்போது 15 கிணறுகளில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி பசுமை மன்றத் தலைவா் சுரேஷ் தா்ஹா கூ றியதாவது:
நீா்நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். தெருக்களில் உள்ள கிணறுகளில் மழைநீரை சேமித்தால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் உயரும். இதைக் கருத்தில் கொண்டு பணிகளைத் தொடங்கினோம்.
கிணறுகள் உள்ள தெருவில் அமைந்துள்ள வீடுகளின் உரிமையாளா்களிடம் பேசி, அவா்களது வீட்டின் மாடியில் குழாய் பொருத்தி, அந்தக் குழாய் மூலம் மழைநீா் கிணற்றுக்குள் சேமிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மழைநீா் சேமிப்பு ஆலோசகா் கிரிதரன் மூலம் மழைநீரை சுத்தம் செய்ய ஆற்று மணல், சிறுஜல்லி கற்கள், சிரட்டை கரி ஆகியவற்றால் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு கிணற்றில் சேமிக்கப்படுகிறது. சிவகாசியில் மேலும் சில கிணறுகளிலும் மழைநீரை சேமிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடா்ந்து திருத்தங்கல் நகரிலும் கிணறுகளை சுத்தம் செய்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.