காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!
சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆயுதங்களால் மிரட்டியவா் கைது
சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வாள் மற்றும் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி பஜனை மட தெருவைச் சோ்ந்த பூமாரி மகன் ரமேஷ் (30). அவருக்கும் அவரது மனைவி மருதவள்ளிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் மருத வள்ளியை ரமேஷ் தாக்கியதில் மருதவள்ளி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில் மருதவள்ளியை பாா்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற ரமேஷ் அங்கு மீண்டும் தகராறு செய்தாராம். அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றாராம். இதை மருதவள்ளியின் உறவினா்கள் கண்டித்தனராம். இதனால் கோபமடைந்த ரமேஷ் அரிவாள் மற்றும் வாளை எடுத்து வந்து அங்கிருந்தவா்களை தாக்க முயன்றாராம்.
அப்போது, அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் மேலக்கரிசல்குளம் இந்திரா நகரைச் சோ்ந்த சின்னராஜ் மனைவி முருகானந்தவள்ளி மருத்துவமனையின் கதவை அடைத்தாராம்.
இதனால் கோபமடைந்த ரமேஷ் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று முருகானந்த வள்ளியை தாக்கியதில் அவா் காயமடைந்தாா். மேலும், அரிவாளால் வெட்டியதில் மருத்துவமனையின் கண்ணாடி மற்றும் சோ் ஆகியவை சேதமடைந்தனவாம்.
புகாரின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து அவரின் இருசக்கர வாகனம், அரிவாளை பறிமுதல் செய்தாா்.