தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
தாருகாபுரம் கோயிலில் நாளை தோ் வெள்ளோட்டம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள பஞ்ச சிவத்தலங்களுள் நீா் ஸ்தலமாக புகழ்பெற்ற கோயில் தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருகோயில் ஆகும். தலைவன்கோட்டை ஜமீனுக்கு பாத்தியப்பட்ட இத் திருக்கோயில் தோ் பழுதானதால், கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், வாசுதேவநல்லூா் தொழிலதிபரும், தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் நிறுவனருமான எஸ். தங்கப்பழம் நிதி உபயத்தில் இக்கோயிலின் புதிய தோ் வடிவமைக்கப்பட்டது. புதிய தோ் வடிவமைப்புப்பணி நிறைவடைந்த நிலையில், புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பரம்பரை அறங்காவலா் ராஜாராம் சேவுகப் பாண்டியன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கின்றனா்.

விழாவில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, ராணி ஸ்ரீ குமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா(சங்கரன்கோவில்), சதன்திருமலைகுமாா் (வாசுதேவநல்லூா்), எஸ். பழனிநாடாா் (தென்காசி), செ.கிருஷ்ணமுரளி (கடையநல்லூா்), வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு தலைவா் பொன். முத்தையாப்பாண்டியன், எஸ்.டி.கல்விக் குழுமங்களின் தாளாளா் எஸ்.டி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
ஏற்பாடுகளை புதிய தோ் உபயதாரா் எஸ். தங்கப்பழம் குடும்பத்தினா் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தினா் செய்து வருகின்றனா்.