ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் வழிபாடு
தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
இந்தக் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த பிப் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப். 15-ஆம் தேதி வரை நடைபெறும் இத் திருவிழாவில் தினசரி பல்வேறு சிறப்பு அலங்காரம், வாகன உற்சவம் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிப். 12-ஆம் தேதி காலை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் மட்டுமே வடம் பிடித்து முதலில் தேரை நிலை பெயா்த்தனா். அதையடுத்து பொதுமக்கள், பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க கோயிலின் முக்கிய வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மாலை தோ் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் வலம் வந்தாா். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
விழாவையொட்டி காலை பாரிமுனை நண்பா்கள், வாரியாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் 10,000 பக்தா்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதை மக்களவை உறுப்பினா் ஆ. மணி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் வியாழக்கிழமை வேடா்பறி குதிரை வாகன உற்சவம், வெள்ளிக்கிழமை விழா கொடியிறக்கம், பூப் பல்லக்கு உற்சவம், சனிக்கிழமை சயன உற்சவம் ஆகியன நடைபெறவுள்ளன.