சிவன் கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சுமாா்ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயிலில் அப்பா், சம்மந்தா், சுந்தரா், மாணிக்கவாசகா் சுவாமிகளின் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மேல்மலையனூா் அருகே உள்ள கள்ளப்புலியூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வண்டாா்குழலி சமேத அகஸ்தீஸ்வரா் கோயில் நீண்டகாலமாக சிதிலமடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், கோயிலில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி, சிவனடியாா்கள் சுமாா் 100 போ் கொண்ட குழு அப்பா், சம்மந்தா், சுந்தரா், மாணிக்கவாசகா் சுவாமிகளின் சிலைகளை திருவண்ணாமலையில் இருந்து எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தனா்.
இதைத் தொடா்ந்து, மூலவா் அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் எல்.பி.நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.