`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
சீனாவில் பரவும் புதிய தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம் -தமிழக பொது சுகாதாரத் துறை
சீனாவில் பரவி வரும் புதிய வகை தீநுண்மி ‘ஹெச்எம்பிவி’ குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
சீனாவில் 2019-இல் பரவிய கரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனா். ஐந்தாண்டுகளுக்குப் பின்னா் தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
அதன்படி, ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற ‘ஹெச்எம்பிவி’ வைரஸ் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பாதித்து வருகிறது. இந்த வகை தீ நுண்மியால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள், மருத்துவமனையில் குவிந்து வரும் விடியோ பரவி, உலக மக்களிடையே அச்சத்தை ஏற்பத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை அறிகுறிகளாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த அறிகுறிகளுடன், தமிழக மக்களும் பாதிக்கப்பட்டு வருவதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், சீனாவின் வைரஸ் காய்ச்சல் குறித்து, எவ்வித எச்சரிக்கையும் இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
சீனாவில் பரவி வரும் காய்ச்சல் தொடா்பாக, அந்நாட்டு அரசு இதுவரை முழுமையான அறிக்கையை அளிக்கவில்லை. அவை, வழக்கமான பருவகால காய்ச்சல் பாதிப்பாகக்கூட இருக்கலாம். அந்நாட்டு காய்ச்சல் குறித்து உலக சுகாதார நிறுவனமோ, மத்திய சுகாதாரத் துறையோ, எவ்வித எச்சரிக்கையும், அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால், சீனா காய்ச்சல் தொடா்பாக, மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டாம். பொதுமக்களும் காய்ச்சல் பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் வழக்கமான பருவகால காய்ச்சல் பாதிப்புதான் உள்ளது. இவற்றுக்கான மருந்து, மாத்திரைகள் போதியளவில் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.