மக்களால் மாற்றப்பட்ட முடிவு! டிரம்ப்பை விமர்சித்ததால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ட...
`சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விஜயலட்சுமியிடம் சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் கூறியதற்கு பிறகும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன்னைப் பற்றி சீமான் அவதூறாகப் பேசி வருவதாகவும் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் மன்னிப்பு கேட்கும் விதமாக எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், `கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தனக்கு எதிரான அனைத்து புகார்களையும் வாபஸ் வாங்கிக்கொண்டு பெங்களூரு சென்று விட்டார். பிறகு 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் அதே புகாரை தெரிவித்திருக்கிறார் மேலும் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை அவர் செய்து வருகிறார்' என வாதங்களை முன் வைத்தார்
அப்போது பேசிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவருமே அரசியல்வாதிகளா என கேள்வி எழுப்பினர் அதற்கு நடிகை விஜயலட்சுமி தரப்பு தான் அரசியல்வாதி அல்ல என்றும் தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாகவும் தனது சினிமா வாழ்க்கையும் அவரால் சீரழிந்து போய்விட்டதாகவும் கூறினார்.
அப்போது பேசிய நீதிபதிகள், `அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் இப்போது நினைத்தாலும் படங்களில் நடிக்க முடியும். அக்கா, அம்மா, பாட்டி போன்ற கதாபாத்திரங்களில் கூட நீங்கள் நடிக்கலாம்' என அறிவுரை கூறினார்கள்.

இதனையடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தை நாங்கள் முடித்து வைக்க விரும்புகிறோம் எனவே சீமான் மற்றும் விஜயலக்ஷ்மி ஆகிய இரு தரப்பும் பரஸ்பரம் கொடுத்துள்ள புகார்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அதேபோல பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டனர் . அதற்கு சீமான் தரப்பு சம்மதம் தெரிவித்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், `சீமானுக்கு எதிரான புகாரை வேண்டுமானால் தான் திரும்பப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் அவரிடம் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமுடியாது. அவருக்கு எதிராக தான் குற்ற வழக்கை தாக்கல் செய்திருக்கிறேன். சீமான் எனக்கு எதிராக அப்படி எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை அப்படி இருக்கும்போது அவரிடம் நான் மன்னிப்பு கேட்க முடியாது' எனத் திட்டவட்டமாக கூறினார்.
அப்போது சற்று கோபமடைந்த நீதிபதிகள், `நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சீமானிடம் இருந்தும் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள். இரண்டு தரப்பும் வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு அது தொடர்பான பிரமாண பத்திரத்தை எங்களிடம் சமர்ப்பியுங்கள். மேலும் இந்த வழக்கில் இனி இரு தரப்பும் ஊடகங்களிடம் எதையும் பேசக்கூடாது அப்படி மீறி பேசினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும்கூட இந்த வழக்குகளைப் பற்றிப் பேசக்கூடாது' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த அணுகுமுறையால் பல ஆண்டுகளாக சீமானுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ஒரு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளதாகப் பார்க்கப்படுகின்றது எனினும் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் விஜயலட்சுமி உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் முக்கியமான கேள்வி