சீமான் வீட்டில் கைதானவா்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவா்கள் குறித்த ஆட்கொணா்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை குறித்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட அழைப்பாணை கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டுப் பணியாளா் சுபாகா் மற்றும் பாதுகாவலா் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீஸாா் கைது செய்தனா். பாதுகாவலா் வைத்திருந்த துப்பாக்கியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக ஆயுத தடுப்பு உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்னா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் அமா்வு முன் விஜயகுமாா் என்ற வழக்குரைஞா் ஆஜராகி, சீமான் வீட்டில் அழைப்பாணையை கொடுக்க சென்ற இடத்தில் காவல் துறை அத்துமீறி உள்ளதாகவும், இரண்டு பேரை அழைத்துச் சென்று சட்டவிரோதமாக வைத்துள்ளதாகவும், இதுகுறித்த ஆட்கொணா்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டாா்.
அதற்கு நீதிபதிகள் போலீஸாா் கைது செய்தால் 24 மணி நேரம் அவா்களுக்கு உள்ளது. 24 மணி நேரத்தில் அவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா் செய்வாா்கள். எனவே அதையெல்லாம் நீங்கள் சரிபாா்த்த பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறி அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என மறுத்துவிட்டனா்.