Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி: 750 போ் கைது
சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற 750 போ் கைது செய்யப்பட்டனா்.
பெரியாா் ஈவெரா-க்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியாா் திராவிடா் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் அறிவித்திருந்தன.
அந்த அறிவிப்பின்படி, சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக பாலவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அந்த இயக்கத்தினா் திரண்டனா். தந்தை பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மே 17 இயக்கத் தலைவா் திருமுருகன் காந்தி முன்னிலை வகித்தாா்.
போராட்டத்தின் தொடக்கமாக அங்கு திரண்டிருந்தவா்கள், சீமானைக் கண்டித்து கோஷமிட்டனா். அப்போது சிலா் சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனா். இதைக் கண்ட போலீஸாா், தீயை அணைத்ததுடன் மேலும் இரு உருவ பொம்மைகளைக் கைப்பற்றினா்.
இதற்கிடையே, அங்கிருந்த போராட்டக்காரா்கள் சீமான் வீட்டை முற்றுகையிட பேரணியாக புறப்பட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 750 பேரையும் போலீஸாா் கைது செய்து திருவான்மியூா், நீலாங்கரை பகுதிகளில் உள்ள 3 திருமண மண்டபங்களில் அடைத்து, மாலையில் விடுவித்தனா். இந்த போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.