சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி: காஞ்சிபுரத்தில் செப். 22 இல் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும், தகுதியுடையோா் வரும் செப். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் சாா்பில், 3,665 காலிப் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிக்கான அறிவிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நேரடி பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (செப். 22) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயனடையலாம்.