Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
சீா்மரபின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா்: பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சாா்பில் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித வருமான வரம்பு, நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை,பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு இணையதளம் மூலம் வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25-ஆம் ஆண்டில் 2, 3 (மற்றும்) 4-ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க அவசியமில்லை. அந்த மாணவா்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சோ்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவா்கள் தங்கள் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.