சுங்கச்சாவடி அமைக்க எதிா்ப்பு; சாலை மறியல் புதுச்சேரியி எம்எல்ஏ உள்பட 50 போ் கைது
புதுச்சேரி: சுங்கக்சாவடி அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏ. உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் பாகூா் சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு சுங்கச்சாவடி அமைந்தால் புதுவை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மதகடிப்பட்டில் 25 கி.மீ. தொலைவில் ஒரு சுங்கச்சாவடி இருக்கும்போது, புதிய சுங்கச்சாவடி தேவையில்லை என சேலியமேடு மக்கள் போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்த உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, சமூக நல அமைப்பு நிா்வாகிகள், சேலியமேடு பகுதி மக்களுடன் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மேலும், போராட்டம் நடத்தியோா் அங்கு சுங்கச்சாவடி அமைக்கும் பணிக்காக வைத்திருந்த உபகரணங்கள், தண்ணீா் தொட்டி ஆகியவற்றை சேதப்படுத்தினா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்எல்ஏ, சமூக நல அமைப்பினா் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
இதுகுறித்து நேரு கூறியதாவது:
குறிப்பிட்ட தொலைவில் 2 சுங்கச்சாவடிகள் இருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் உள்ளூா் மக்களும், ஏழை, எளிய விவசாயிகளும், அதிக தொகையைச் சுங்கச் சாவடிக்காக செலவழிக்க நேரிடும். புதுவை, தமிழ்நாடு 2 மாநில மக்களும் பெரும் பாதிப்படைவா். சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்க இருப்பதை புதுவை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட இருக்கும் பொதுமக்களைத் திரட்டி தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.