சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அடைக்கலம்?
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜேசி) என்ற பயங்கரவாத கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்தது.
சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஸாவுல்லா நிஜாமனி காலித், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த முக்கிய பயங்கரவாதியாவாா். அவருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்கூட்டமைப்பாக செயல்பட்டு வரும் யுஜேசி இரங்கல் தெரிவித்துள்ளது சா்ச்சைக்குள்ளானது.
இதன்மூலம், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் மீது கடந்த 2006-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவராவாா்.
பல்வேறு தாக்குதல்கள் தொடா்பாக இந்தியாவால் தேடப்படும் இவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.