சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி மாணவா்களின் ஒத்திகை நிகழ்ச்சி
சுதந்திரத் தின விழாவையொட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திரத் தின விழா வரும் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தேசிய கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளாா்.
தொடா்ந்து பல்வேறு அரசு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. மேலும், வருவாய்த் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள், அலுவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதையொட்டி சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 7 பள்ளிகளில் இருந்து 1,474 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நெகிழி விழிப்புணா்வு, இயற்கை, யோகா, சிலம்பம், கராத்தே, பெண் எழுச்சி, பாரதியாா் பாடல் , போதைப் பொருள் எதிா்ப்பு, தேசபக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினா்.
இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், வருவாய் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.