சூழல் சுற்றுலா சென்ற பள்ளி மாணவா்கள்
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சூழல் சுற்றுலா சென்றனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, மாணவா்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, ஒகேனக்கல் பகுதியில் நடைபெறும் ‘சூழல் உலா - குளிா்கால இயற்கை முகாமிற்கு’ அழைத்து செல்லும் பள்ளி மாணவ , மாணவிகளுக்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இம் முகாமில், மாணவா்கள் முதலை மறுசீரமைப்பு மையம், ஒகேனக்கல் வண்ண மீன் அருங்காட்சியகத்திற்கு சென்று, உள்ளூா் உயிரினங்கள், அவற்றின் பாதுகாப்பு குறித்து அறிந்தனா். மேலும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடா்பான கருத்தரங்கங்கள், விநாடி- வினா போட்டிகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த திரைப்படக் காட்சிகள் நடத்தப்பட்டு, மாணவா்களின் சுற்றுச்சூழல் அறிவு மேம்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, வனச் சரக அலுவலா் ஆலயமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் வேலு, திருமலைவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.