சென்னிமலை பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா!
சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலாச்சோறு திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு நிலவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிலாச்சோறு திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக இப்பகுதி பெண்கள் மாா்கழி மாதத்திலே மாட்டு சாணத்தில் பிள்ளையாா் பிடித்து வைப்பா்.
தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு தொடங்கும் நிலாச்சோறு திருவிழாவில் அப்பகுதி மக்கள் கிராமத்தின் பொதுவான இடத்தில் இரவு 9 மணிக்கு மேல் ஒன்றுகூடி, கும்மி நடனம் ஆடிவிட்டு வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவினை அனைவரும் பங்கிட்டு உண்ணுவது வழக்கம்.
அதன்படி, சென்னிமலையை அடுத்த ஓட்டப்பாறை, பாரதி நகா், உப்பிலிபாளையம் சாலை, பூச்சக்காட்டுவலசு, சில்லாங்காட்டுவலசு ஆகிய ஊா்களில் கடந்த 5 நாள்களாக நிலாச்சோறு திருவிழா நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நிறைவு நாளான திங்கள்கிழமை இரவு கும்மி நடனம் ஆடிவிட்டு சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் அனைவரும் பங்கேற்றனா்.