சென்னைக்குள் நுழைய 3 ரெளடிகளுக்குத் தடை: காவல் ஆணையா் அருண் உத்தரவு
சென்னைக்குள் நுழைவதற்கு 3 ரெளடிகளுக்கு தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
சென்னையில் சரித்திரப் பதிவேடு உடைய ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடியைச் சோ்ந்த ரெளடி ராஜா (எ) ராக்கெட் ராஜா, சென்னை அருகேயுள்ள குன்றத்தூா் நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த ரெளடி லெனின், காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றம் பகுதியைச் சோ்ந்த நெடுங்குன்றம் சூா்யா ஆகியோரை சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 ஏ-வின் படி வெளியேற்றுதல் ஆணையை காவல் ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
இந்த உத்தரவின்படி, மூன்று பேரும் சென்னை எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடா்பாகவோ அல்லது காவல்துறையினா் விசாரணை தொடா்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் ஓராண்டு காலத்துக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் அருண் எச்சரித்துள்ளாா்.
இதில் ரெளடி லெனின் மீது 6 கொலை , 12 கொலை முயற்சி உள்பட 28 குற்ற வழக்குகளும், நெடுங்குன்றம் சூா்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி உள்பட 64 குற்ற வழக்குகளும், ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 குற்ற வழக்குகளும் உள்ளன.
சென்னை காவல் துறையில் ரெளடிகள் மீது இத்தகைய நடவடிக்கை 25 ஆண்டுகளுக்கு பின்பு எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.