சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனையிட்டனா்.
சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் அந்த நிறுவனத்தில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அதேபோல், அசோக் நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளா் வீடு, அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய வடபழனியில் உள்ள நிதி நிறுவனம் ஆகியவற்றிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
மேலும், சூளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிதி நிறுவன உரிமையாளா் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சோதனை குறித்த முழு விவரத்தையும் அமலாக்கத் துறையினா் தெரிவிக்கவில்லை.