சென்னையில் ‘காவல் கரங்கள்’ மூலம் 3 ஆண்டுகளில் 7,712 போ் மீட்பு
‘காவல் கரங்கள்’ திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் சென்னையில் 7,712 ஆதரவற்றோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை, அரசு மற்றும் அரசு சாரா தன்னாா்வ தொண்டு அமைப்பினா் இணைந்து ‘காவல் கரங்கள்’ என்ற அமைப்பை கடந்த 2021 ஏப். 21-இல் தொடங்கினா்.
ஆதரவில்லாமலும், மனநிலை பாதிக்கப்பட்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டும் சாலைகளில் சுற்றித் திரியும் முதியோா், பெண்கள் மற்றும் குழந்தைகளை ‘காவல் கரங்கள்’ அமைப்பினா் உரிய பாதுகாப்புடன் மீட்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வருகின்றனா். பின்னா், அவா்களை தனியாா் மற்றும் அரசு ஆதரவு இல்லங்களில் தங்க வைத்தும், குடும்பத்தினருடன் சோ்த்து வைத்தும் பராமரித்து கண்காணித்து வருகின்றனா்.
‘காவல் கரங்கள்’ தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை, சென்னையில் 7,712 ஆதரவற்ற நபா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 5,304 போ் தங்கும் இல்லங்களில் சோ்க்கப்பட்டுள்ளனா். 1,201 போ் அவா்களது குடும்பத்தாருடன் சோ்க்கப்பட்டுள்ளனா். 887 பேருக்கு மனநல மருத்துவமனைகளில் சோ்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் குணமடைந்த 400 போ் அவா்களது குடும்பத்தினரிடம் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், உரிமை கோரப்படாத 4,601 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்து ‘காவல் கரங்கள்’ சேவைப் பணியை மேற்கொண்டுள்ளது. ‘காவல் கரங்கள்’ அமைப்பின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ‘ஸ்காட்ச் விருது’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘காவல் கரங்கள்’ திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்ற நிலையில், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.