தமிழகத்தில் மின்வெட்டை தவிா்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின்வாரியம...
சென்னையில் திருட்டு; வெளிநாட்டிலிருந்து கண்டுபிடித்த ஓனர் - வசமாக சிக்கிய பிரபல திருடர்கள்!
சென்னை அசோக்நகர், சீனிவாச பிள்ளை தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ரமணன் (58). இவர் தன்னுடைய மனைவியுடன் பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் அவரது மகள்களை பார்க்க கடந்த 4.4.2025-ம் தேதி சென்றார். 7-ம் தேதி அதிகாலையில் வெங்கட்ரமணனின் செல்போனுக்கு ஒரு அலெர்ட் மெசேஜ் வந்தது. அதைப்பார்த்த வெங்கட்ரமணன், உடனடியாக சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை செல்போன் மூலம் பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருவர் நடமாடும் காட்சி பதிவானது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கட்ரமணன், உடனடியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சுப்பிரமணியம் (76) என்பவரை போனில் தொடர்பு கொண்டு, என்னுடைய வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துவிட்டனர் என்று தகவல் கூறியிருக்கிறார். அதனால் அலெர்ட்டாக சுப்பிரமணியம், தன்னுடைய வீட்டிலிருந்தப்படி வெங்கட்ரமணன் வீட்டை நோட்டமிட்டிருக்கிறார். அப்போது வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் இருப்பது உறுதியானது. இதையடுத்து பெல்ஜியம் நாட்டிலிருக்கும் வெங்கட்ரமணனுக்கு தகவல் தெரிவித்தார் சுப்பிரமணியம்.

இதையடுத்து திருடர்களைப் பிடிக்க புத்திசாலித்தனமாக யோசித்த வெங்கட்ரமணன், உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சென்னை காவல் கட்டுபாட்டறையிலிருந்து இரவு ரோந்து பணியிலிருந்த உதவி கமிஷனர் சுரேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீஸ் டீம், வெங்கட்ரமணன் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது போலீஸாரைப் பார்த்ததும் வீட்டுக்குள் இருந்த திருடர்கள், சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (65), திருப்பத்தூரைச் சேர்ந்த பிலிப் (57) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் பிரபல திருடர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கவரிங் நகைகள், அமெரிக்க டாலர், கரன்சிகள், இந்திய பணம், ஜம்பொன் சிலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் அசோக் நகர் காவல் நிலையத்தில் இரவு ரோந்து போலீஸார் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட கமலக்கண்ணன் பிரபல திருடன். இவர் மீது 70 குற்ற வழக்குகள் உள்ளன. 65 வயதானாலும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கமலக்கண்ணன். இவரை சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியில் வந்து தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறார். கமலக்கண்ணனின் ் கூட்டாளியான பிலிப் மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் வெங்கட்ரமணன் வீட்டில் திருடுவதற்கு முன்பு அவரின் வீட்டின் எதிரில் உள்ள ஆடிட்டர் ஒருவரின் அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியிலிருந்து பணத்தை திருடியிருக்கிறார்கள். பின்னர்தான் வெங்கட்ரமணன் வீட்டில் திருடியிருக்கிறார்கள். சிசிடிவி-யால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்றனர்.