சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது.
மேலும் மூன்று உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமன பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டன.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூா்யகாந்த், விக்ரம்நாத் ஆகியோா் கொண்ட கொலீஜியம் குழுவின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவை உறுதி செய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவ்விரு நீதிபதிகளும் கடந்த 2023-இல் சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவா்களாவா்.
இதேபோல், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்களான ஜியா லால் பரத்வாஜ், ரோமேஷ் வா்மா ஆகியோரை அந்த உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தைச் சோ்ந்த நீதித் துறை அதிகாரிகள் கீதா கடாபா பரதராஜ ஷெட்டி, முரளிதர பாய் போா்கத்தே, தியாகராஜ நாராயண் ஆகியோரை அந்த மாநில உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும், கூடுதல் நீதிபதி குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்தை நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திரிபுரா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி பிஸ்வஜித் பலித்தை நிரந்தர நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.