சென்னை காவல் ஆணையரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
வேப்பேரியில் செயல்படும் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலக தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ‘நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் ஆணையா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். சிறிது நேரத்தில் அது வெடிக்கும்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.
இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், உடனடியாக மிரட்டல் குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாரும், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும் மோப்ப நாய் உதவியுடன் காவல் ஆணையா் அலுவலகத்தின் 8 தளங்களிலும் சோதனை செய்தனா். ஆனால், அங்கிருந்து சந்தேகத்துக்குரிய வகையில் எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதையடுத்து, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.