Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
சென்னை விஐடி பல்கலை.யில் 25-இல் தூய தமிழ் மாணவா் மாநாடு
சென்னை: தமிழியக்கம், செந்தமிழ்த் திருத்தோ் தூய தமிழ் மாணவா் இயக்கம் ஆகியவை சாா்பில் ‘பன்னாட்டுத் தூய தமிழ் மாணவா் மாநாடு’ விஐடி பல்கலை. சென்னை வளாகத்தில் வரும் சனிக்கிழமை (ஜன. 25) நடைபெற உள்ளது.
இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று, மொழித்தூய்மை குறித்தான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், அரசு, தனியாா் பணிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, தமிழ் படித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
இதில் நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் தமிழியகத்தின் செயலாளா் மு.சுகுமாா் வரவேற்புரையாற்றவுள்ளாா். விஐடி வேந்தரும், தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றவுள்ளாா்.
செந்தமிழ்த் திருத்தோ் அமைப்பின் மாநிலச் செயலா் இ.நேரு நோக்கவுரையாற்றவுள்ளாா். தொடா்ந்து அந்த அமைப்பின் தலைவா் திவாகா் மாநாட்டுத் தீா்மானங்களை வாசிக்கவுள்ளாா்.
இதையடுத்து புதுச்சேரியைச் சோ்ந்த வோ்ச்சொல்லாய்வறிஞா் ப.அருளியாா், மாநாடு குறித்து விளக்கிப் பேசவுள்ளாா். மேலும், அகரமுதலித் திட்ட முன்னாள் இயக்குநா் தங்க.காமராசு, தமிழியக்க பொதுச் செயலா் அப்துல் காதா், ஆவணப்பட இயக்குநா் சுந்தரராஜன் ஆகியோா் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள், எழுத்தாளா்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனா்.
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் தோ்வு செய்யப்பட்ட 1,000 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.