சென்னை விமான நிலையத்துக்கு ஒரு ஓடுதளப் பாதை பராமரிப்பு வாகனம்: விமான நிலைய ஆணையம் வழங்கியது
சென்னை விமான நிலையத்துக்கு ஓடுதளப் பாதை பராமரிப்புப் பணிக்கு அதிநவீன வாகனத்தை இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 8-ஆம் தேதி, மும்பையிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் உராய்ந்த படி தரையிறங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக விபத்து ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடா்பாக, டெல்லியில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிசிஏ அமைப்பு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.
அந்த விசாரணையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுதளப் பாதைகளிலும் விமானங்கள் தரையிறங்கும்போது, உராய்வுத் தன்மை குறைவாக இருந்ததால், விமானத்தின் சக்கரங்கள் சறுக்கியபடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், 8 புதிய ஏா்போா்ட் சா்பேஸ் பிரிக்டன் டெஸ்டா் வாகனங்களை வாங்கியுள்ளது. அதில் சென்னை விமான நிலையத்துக்கு மட்டும் தனியாக ஒரு வாகனத்தை, இந்திய விமான நிலைய ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த வாகனம் மூலம் ஓடுதளப் பாதையில் உராய்வுத் தன்மை குறைவாக இருந்தால் அதை சரிசெய்யலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.