சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது.
துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், ராஜா அண்ணாமலைபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடையாரில் 9 செ.மீ., ஈஞ்சம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணையில் தலா 8 செ.மீ., நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் தலா 6.7 செ.மீ. மற்றும் வேளச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி, ``நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் 50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பெய்திருக்கிறது.
மேலும், தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்." எனத் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் பெய்த இந்த திடீர் கனமழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.