செய்திகள் :

செப்.1 முதல் நெல் கொள்முதல்: அமைச்சா் அர.சக்கரபாணி அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பணிகள் செப்டம்பா் 1-இல் தொடங்கவுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நிகழாண்டின் (2024-25) நெல் கொள்முதல் பருவத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 46.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் நெல் கொள்முதலுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகை உயா்த்தி வழங்கப்படவே இல்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா் ஊக்கத் தொகை படிப்படியாக உயா்த்தப்பட்டு, இப்போது சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.130-ஆகவும், பொது ரகத்துக்கு ரூ.105-ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது. 2025-26-ஆம் ஆண்டு பருவத்துக்கு சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆகவும் வழங்கப்படும்.

51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.83 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.40,440.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசு மட்டும் ஊக்கத் தொகையாக ரூ.1,816.46 கோடியை அளித்துள்ளது.

கொள்முதல் தொடக்கம்: வரும் (2025-26) ஆண்டுக்கான நெல் கொள்முதல் செப்டம்பரில் தொடங்குகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. அதன்படி செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வரும் நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் பணிகள் தொடங்கவுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.