J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இ...
டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பதிலடியாக அமெரிக்கா மீது சீனாவும் வரியை அறிவித்தது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் சில அரிய கனிமங்களின் ஏற்றுமதியையும் குறைத்தது.
இதனையடுத்து, சீனா மீதான வரியை அமெரிக்கா குறைத்தது.
இதனிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிப்பதாகக் கூறி, இந்தியா மீதும் 50 சதவிகித வரியை டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் இந்த வரிவிதிப்பு உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியது.
இந்த நிலையில், சீனாவுடன் இந்தியா மீண்டும் வர்த்தகத்தில் ஈடுபடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லிபுலேக் கணவாய் (உத்தரகண்ட்), ஷிப்கி லா கணவாய் (இமாசல்), நாது லா கணவாய் (சிக்கிம்) உள்ளிட்டவற்றின் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
இதன்மூலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மற்றும் சீன படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, இருநாட்டின் உறவில் விரிசல் உண்டானது.
இந்த நிலையில், டிரம்ப்பின் காரணமாக இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.