மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
Seeman: "காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..!" - கொந்தளித்த சீமான்
சென்னையில் ரிப்பன் மாளிகை முன்னால் 13 நாட்களுக்கும் மேலாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நேற்றிரவு (ஆகஸ்ட் 13) 'அப்புறப்படுத்தியிருக்கிறது' காவல்துறை.
தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கையாண்ட விதத்துக்காக பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்களைச் சந்தித்த சீமான் செய்தியாளர்களிடம் திமுக அரசைக் கண்டித்துப் பேசியுள்ளார்.
வாக்குறுதிகளை இன்னும் நம்பச் சொல்கிறீர்களா?

தனியார் மயமாதல், நீதித்துறை மற்றும் அரசு மீது கடுமையான கருத்துக்களை முன்வைத்து அவர் பேசியதாவது:
``மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு இருந்து போராடுவதில் நியாயம் இல்லையா? பொதுமக்களுக்கு இடையூறு என்கிறார்கள்… போராடுபவர்கள் பொதுமக்கள் இல்லையா?
நள்ளிரவில் அடித்து பெண்களை சித்ரவதை செய்து வாகனத்தில் ஏற்றி அடிப்படை வசதிகள், தண்ணீர், உணவு இல்லாத இடத்தில் அடைத்து அலைக்கழிப்பதைத்தான் இந்த நாட்டின் நீதித்துறை விரும்புகிறதா?
இவ்வளவு நாள் கண்டுகொள்ளாமல் இருந்த அரசு அதிகாரம் இன்று, துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு போடுகிறோம், மருத்துவக் காப்பீடு கொடுக்கிறோம், இறந்துவிட்டால் 10 லட்சம் நிவாரணம் தருகிறோம் என அறிவிக்கிறது.
இதுபோன்ற நாடகங்களை, வாக்குறுதிகளை இன்னும் நம்பச் சொல்கிறீர்களா? நீங்கள் கொடுத்த வாக்குறுதிதானே பணி நிரந்தரம், அதைக் கேட்டுத்தானே போராடினர். நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அரசின் பொறுப்பா, சுவீடன் நாட்டு நிறுவனமான ராம்கி நிறுவனத்தின் பொறுப்பா?
நீதித்துறையும் காவல்துறையும் தனியாருக்கு...
அதிகாரிகள் மக்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் தரகர்களாக இருக்கின்றனர். 'சோசலிச க்யூபாவைக் காப்போம், தமிழ்நாட்டை விற்போம்' என்று இந்த அரசு செயல்படுகிறது.
முதலாளிகளுக்கு தரகுவேலை பார்க்கும் அரசு எப்படி மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படும்? உங்கள் கொள்கைகள் யாருக்காக இருக்கின்றன? ராம்கி என்ற தனியார் நிறுவனத்துக்கு சேவை செய்வதுதான் கொள்கை முடிவா? மக்களின் நலன் கொள்கையா, தனிப்பெரும் முதலாளியின் நலன் உங்கள் கொள்கையா? இவற்றைக் கொள்கை எனச் சொல்லவும் திராவிட மாடல் எனக் கூறவும் வெட்கமாக இல்லையா?
கல்வியைத் தனியாருக்குக் கொடுத்ததனால் மருத்துவம் படிக்க ஒன்றரைக் கோடி செலவாகிறது. யார் கொடுப்பார்கள் பணம்? கல்வி என் அறிவைப் பெருக்கவா, முதலாளியின் பணத்தைப் பெருக்கவா? மருத்துவத்தை சந்தையாக்கிக்கொண்டு, நீரை விற்பனைப் பண்டமாக ஆக்கிக்கொண்டு... மனிதன் நீரை பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கலாம், மற்ற உயிர்கள் என்ன செய்யும்? யாரிடம் பதில் இருக்கிறது?
எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுக்கும் அரசு, போராடும் மக்களை அடிக்கும் காவல்துறை, போராடுவது பொதுமக்களுக்கு இடையூறு எனக் கூறும் நீதி… நாளை அரசுக்கு 10 லட்சம் கோடி கடனாகிவிட்டது என காவல்துறையை தனியாருக்கு தாரைவார்த்தால் ஏற்பார்களா? இந்தியாவுக்கு 150 லட்சம் கோடி கடனாகிவிட்டது என நீதித்துறையை தனியாருக்கு கொடுத்தால் ஏற்பார்களா? ஒரு நாள் இதே நிலை வரும்.
ஏனென்றால் ராணுவத்தில் அந்நிய முதலீடு வந்துவிட்டது. ராணுவத்துக்கு உடை தைத்துக்கொடுப்பது யார்? துப்பாக்கி, குண்டு, போர் விமானம் எல்லாம் எங்கே வாங்கினீர்கள்? அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் இந்தியாவின் சந்தையை கைப்பற்றிவிட்டோம் என்கிறார். இது நாடு அல்ல அவனுக்கு, சந்தை! நாம் அவன் உற்பத்தியை வாங்கி பயன்படுத்தும் மந்தை.
இப்போது மருத்துவர்கள் தனியாருக்கு, ஆசிரியர் பணி தனியாரிடம், மின் உற்பத்தி, விநியோகம் அதானியிடம்… ஒருநாள் காவல்துறையும் நீதித்துறையும் தனியாரிடம் போகும்போது நாங்கள்தான் உங்களுக்காகப் போராட வேண்டும். அதனால் மாண்புமிகு நீதிபதிகள் இந்த அரசு மிக மோசமான ஆட்சியை நடத்துகிறது என்பதையும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

வளர்மதி, வழக்கறிஞர் நிலவு மதியைத் தாக்கிய காவல்துறை!
கூலிக்காகப் போராடும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கூலி படம் பார்க்கிறார் முதல்வர். மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தது மக்களின் தவறுதான். அதிகாரமில்லாத மக்கள், விவசாயிகள், குரலற்றவர்கள், அரசியல் பலமில்லாதவர்கள், பேசுவதற்குத் தலைவன் இல்லாதவர்கள் மீதுதான் அரசு கை வைக்கிறது.
எண்ணூர், கடலூர், தூத்துக்குடி போன்ற மீனவ மக்கள் அதிகமாக வாழக்கூடிய இடங்களில் நச்சு ஆலைகளை நிறுவுவார்கள். ஏனென்றால் அவர்களுக்குத்தான் தலைவனுமில்லை, அரசியல் அதிகாரமுமில்லை.
அப்படித்தான் சென்னையில் வசித்த பூர்வகுடிகளை செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் தூக்கி எறிந்தார்கள். இப்போது துப்புரவு பணியாளர்களுக்கு அரசியல் பலம் இல்லாததால் கோழியைப்போல கழுத்தைத் திருகுகிறார்கள்.
ஒரு கோழியை கறிக்கடைக்காரர் வெட்டும்போது கூண்டுக்குள் உள்ள கோழிகள் அங்கிருக்கும் இரையைத் தின்றுகொண்டிருக்கும். அப்படித்தான் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தங்கை வளர்மதி, வழக்கறிஞர் நிலவு மதி ஆகியோரை எல்லாம் 20 காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். பெண் பிள்ளைகள் சட்டம் படித்தது மக்களைக் காப்பாற்றத்தான். அப்படிப் போராட்டக்களத்துக்கு வரும் பிள்ளைகளை அச்சுறுத்துவதுதான் ஜனநாயகமா?
இன்றைய வலியையும் வேதனையையும் கண்ணீரையும் அப்படியே விட்டுவிடக் கூடாது. நம்மிடம் வலிமையான ஒரு ஆயுதம் இருக்கிறது. வாக்கு! அதை இந்த அநீதிக்கு எதிராகத் தூக்க வேண்டும்." என்றார்.