மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில், தண்டகாரன்யா சிறப்பு மண்டல ஆணையத்தின் உறுப்பினரான விஜய் ரெட்டி என்பவரை ரூ.90 லட்சம் வெகுமதியும் மற்றும் ராஜ்நந்த்காவோன் - கான்கர் எல்லைப் பிரிவின் செயலாளர் லோகேஷ் சலாமே என்பவரை ரூ.26 லட்சம் வெகுமதியும் அறிவித்து அரசுப் படைகள் தேடி வந்தன.
இந்நிலையில், மொஹ்லா-மன்பூர்-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் வனப்பகுதியில், மாநில காவல் துறை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் நேற்று (ஆக.13) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்களான விஜய் ரெட்டி மற்றும் லோகேஷ் சலாமே ஆகியோர் சுட்டுக்கொல்லட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட விஜய் ரெட்டியை 4 மாநில காவல் துறையினர் தேடி வந்ததாகவும், அதற்காக சத்தீஸ்கர் காவல் துறையினர் ரூ.25 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறையினர் ரூ.25 லட்சமும், தெலங்கானா காவல் துறையினர் ரூ.20 லட்சமும் ஆந்திர காவல் துறையினர் ரூ.20 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்ததாகக் கூறியுள்ளனர்.
இதேபோல், லோகேஷ் சலாமியை பிடிக்க, சத்தீஸ்கர் காவல் துறை ரூ.10 லட்சமும், மகாராஷ்டிர காவல் துறை ரூ.16 லட்சமும் வெகுமதிகளாக அறிவித்திருந்தது தெரியவந்துள்ளன.
இத்துடன், அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு! 167 பேர் மீட்பு!