மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
``உறுப்பினர் சேர்க்க `ஓரணியில் தமிழ்நாடு’ என பிச்சை எடுக்கிறார்கள்’’ - விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (14-8-2025) மாலை, `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதி ஆம்பூர். தி.மு.க-வும், அதன் கூட்டணியும் `அ.தி.மு.க அரசு அமைந்தால் இந்த சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்காது’ என்கிற தோற்றத்தை, அவதூறான பிரசாரத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. 31 ஆண்டுகாலம், அ.தி.மு.க இந்த மண்ணில் ஆண்டது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். சட்டம் - ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டது. இன்றைக்கு அப்படியா இருக்கின்றது? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாள் உண்டா? இஸ்லாமிய பெருமக்கள் சிந்திக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் சென்னையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே தி.மு.க தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்களை நேரடியாக சந்தித்து தேநீர் குடித்து பேசினார். `தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நம்பி, தூய்மை பணியாளர்கள் வாக்களித்ததால் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். 4 ஆண்டுகாலம் மனு கொடுத்து, எந்த பிரதிபலனும் இல்லாத காரணத்தினால் அவர்கள் போராட்டத்தில் இறங்கி 10 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை இன்றைக்கு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். `எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ என்று தூய்மை பணியாளர்கள் கேட்கின்றார்கள். நியாயமான கேள்வி.
ஓட்டுகளை பெறுவதற்காக அன்றைய தினம் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துவிட்டார். இன்றைக்கு நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர்கள் வைக்கின்ற கோரிக்கை வேறு; இவர் கொடுத்த அறிவிப்பு வேறு. இன்றைக்கு தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். `இரவோடு இரவாக காவல்துறை நடத்திய `அப்புறப்படுத்துதல்’ முற்றிலும் சட்டத்துக்கு புறம்பான மனித உரிமை மீறல். அதைக் கேள்வி கேட்க சென்றால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது, நாகரிக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.

அத்துமீறிய காவல்துறை மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும். உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலவீனம் வேறெதுவுமில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் சண்முகமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இப்போது தான் கூட்டணி கட்சியினருக்கு ரோஷம் வந்திருக்கிறது. மக்களின் போராட்டம் வலுவடைந்த காரணத்தினால், வேறு வழியில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டிருக்கிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. தி.மு.க குடும்பத்துக்காக இருக்கின்ற கட்சி. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் குடும்ப ஆட்சிக்கு `மரண அடி’ கொடுக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, பேருந்து நிலையப் பகுதியில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கடனை குறைத்து வருவாயை அதிகரிக்க நிபுணர் குழு அமைத்தார்கள். குறைத்தார்களா, இல்லை. கடன் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். 4 வருடத்தில் 4.38 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். இன்னும் ஓராண்டு பாக்கி. இன்னும் 1 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை கடன்காரர்களாக ஆக்கியது தான் இந்த ஆட்சியின் சாதனை. ஸ்டாலின் வாங்கிய இந்தக் கடனை நாம்தான் கட்ட வேண்டும்.
ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். அப்படியே தினம் வருவார். கோட் சூட் போடுவார். பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பார். ஒரு திட்டத்தை அறிவிப்பார். பெயர் வைப்பார். போய்விடுவார். இப்படியே 4 வருடம் வண்டியை ஓட்டிவிட்டார். உண்மை தானே? நான் ஆதாரத்தோடு சொல்கிறேன்.

தி.மு.க ஆட்சியில் தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறதா? ஸ்டாலின் காதுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாக சொல்லுங்கள். `மக்களிடம் எந்த நேரத்தில் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம்’ என்பதில் தி.மு.க-வினர் கைதேர்ந்தவர்கள். இன்னும் ஏழெட்டு மாதங்கள் தான் இருக்கிறது. ஒரு நோயாளி உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் வென்டிலேட்டர் வைப்பார்கள். அப்போது தான் உயிர் போகாமல் இருக்கும். அது மாதிரி தி.மு.க ஆட்சி, மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருக்கிறது. அந்த வென்டிலேட்டர் எடுத்தால் நோயாளியின் உயிர் போய்விடும். அதுபோல, மக்கள் கைவிட்டால் இதோடு தி.மு.க ஆட்சி க்ளோஸ். `அ.தி.மு.க ஆட்சி திறமையான ஆட்சி’ என்பதற்கான சான்றை நாங்கள் பெற்றிருக்கிறோம். தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் சிறப்பாக செயல்பட்டு 140 விருதுகளை பெற்றிருக்கிறோம். கூட்டுறவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, சமூக நலத்துறை, உயர்க்கல்வித் துறை என பலத் துறைகளிலும் தேசிய அளவில் விருது பெற்று, `தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலம்’ என்ற பெயரை நாங்கள் பெற்றோம். தி.மு.க என்ன பெயர் பெற்றிருக்கிறது? `இந்தியாவிலேயே ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு’ என்ற பெயரைத்தான் பெற்றிருக்கிறது.
தி.மு.க கட்சி அல்ல, `கார்ப்பரேட் கம்பெனி’. அதனால்தான் மக்கள் செல்வாக்கையும், கட்சியினரின் செல்வாக்கையும் இழந்துவிட்ட ஸ்டாலின் வீடு வீடாக போய் கதவைத் தட்டி `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இந்திய வரலாற்றில், இதுவரைக்கும் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாவது வீடு வீடாக கதவை தட்டி பிச்சை எடுக்கிற மாதிரி `எங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கேட்டது உண்டா? தி.மு.க-வுக்கு அப்படிப்பட்ட நிலைமை வந்துவிட்டது. உறுப்பினர்கள் சேர்ப்பதற்கே பிச்சை எடுக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டுமா?’’ என்றார் கொதிப்போடு. இதையடுத்து, கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.