செய்திகள் :

செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை Pick-up & Drop செய்முறை பற்றி தெரியுமா? | பூப்பு முதல் மூப்புவரை

post image

ஆச்சர்யமான அறிவியல் பயணம்...

கருத்தரிப்பு நிகழ்வு என்பதே இயற்கையில் நிகழும் ஓர் அழகிய பயணம் என்றிருக்க, செயற்கை கருத்தரிப்பில் இந்தப் பயணத்தை முழுமையாக்கிட உதவுகிறது ஒரு பிக்-அப்  அண்ட் ட்ராப்.! 

ஆம், 'Oocyte Retrieval' எனும் கருமுட்டைகளின் 'பிக்-அப்', அதற்குப் பின் ஆய்வகத்தில் உருவான கருவை கருப்பைக்குள் வைத்திடும்  'ட்ராப்' ஆகியன குறித்த ஓர் ஆச்சர்யமான அறிவியல் பயணத்தைத் தான் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

கருமுட்டை

குழந்தைப்பேறின்மையில் மேற்கொள்ளப்படும் ஐ.யூ.ஐ, ஐ.வி.எஃப், இக்ஸி போன்ற செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளின் முதல்படியான 'சூப்பர் ஓவுலேஷன்' எனும் கட்டுப்படுத்தப்பட்ட சினைமுட்டைத் தூண்டலில், மாதவிடாய் சுழற்சி தொடங்கிய 2-3 நாள்களிலிருந்து மருந்துகள் (சினைப்பைத் தூண்டல் மாத்திரைகள் அல்லது ஊசிகள்) பெண்ணுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு, ஃபாலிக்குலர் ஸ்கேனிங் மூலமாக, சினைப்பையின் நுண்ணறைகளின் வளர்ச்சி அன்றாடம் கண்காணிக்கப்பட்டு, அவை தகுந்த எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி நிலையை எட்டியபிறகு, ஹெச்சிஜி தூண்டல் ஊசி அப்பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. இவையனைத்தும், தம்பதியினர் இருவருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு, முறையான ஒப்புதலும் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன.

30 முட்டைகள்; 30 நிமிடங்கள்

ஹெச்சிஜி ஊசி செலுத்தப்பட்ட 34-36 மணிநேரத்தில் பொதுவாக முட்டைகள் வெளியேறும் என்பதால், Oocyte Retrieval எனும் சினைமுட்டை 'பிக்-அப்', ஹெச்சிஜி ஊசி வழங்கப்பட்ட 36 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண்ணை இதற்கெனத் தயார்படுத்துதல் அவசியமாகிறது. இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்பதால், சிகிச்சைக்கு வருமுன், குறைந்தது 4-6 மணிநேர உணவு உண்ணாமை (ஃபாஸ்ட்டிங்) அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன்

செயற்கை கருத்தரிப்பு கிளினிக் அல்லது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தக்க ஆயத்தங்களுடன், பிரத்யேக அறுவை அரங்கில், மயக்கவியல் நிபுணரால் வலி நிவாரண மருந்து வழங்கப்படும்.

பின் ட்ரான்ஸ் வெஜைனல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் உதவியுடன், யோனிப்பாதை வழியாக, ஒரு சிறிய ஊசி கொண்டு, வளர்ச்சி அடைந்த சினைப்பை நுண்ணறைகளிலிருந்து, திரவத்துடன் கூடிய கருமுட்டைகளை தக்க அழுத்தம் தந்து, ஒரு பிரத்யேக உறிஞ்சு-குழாய்க்குள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் சேகரிக்கிறார். பொதுவாக 10-15 கருமுட்டைகள் கிடைக்கப்பெறும் இந்த பிக்-அப்பில் 25-30 முட்டைகள் வரையில் கிடைக்கக்கூடும்.

அதேபோல, அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு மருத்துவமனை உள்-அனுமதி  பொதுவாகத் தேவையில்லை. பிக்-அப் சிகிச்சை முடிந்த 5-6 மணிநேரத்தில் அவர் வீடு திரும்பவும், இயல்பு நிலைக்குத் திரும்பவும் இந்த எளிய சிகிச்சை உதவுகிறது. என்றாலும், சிலரில் மட்டும், சிகிச்சைக்குப் பின் அதிக வலியோ, சிறுநீர்த் தேக்கமோ அல்லது வயிற்றுக்குள் ரத்தக்கசிவோ ஏற்படக்கூடும் என்பதையும், அதன் காரணமாக சிகிச்சை நேரம் நீடிக்கக்கூடும் என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

வரலாற்றின் பக்கங்களை சிறிது திரும்பிப் பார்த்தோமேயானால், உண்மையில் இந்த oocyte retrieval எனும் சினைமுட்டை பிக்-அப், நமது அன்றாட பிக்-அப்  அண்ட் ட்ராப் வாகன சேவைகளைக் காட்டிலும், பற்பல மாற்றங்களை சந்தித்துள்ளது எனலாம்.

ஆரம்பநிலையில் லேப்ராட்டமி அல்லது லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகள் வாயிலாக மட்டுமே இந்த பிக்-அப் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வயிற்றைக் கிழித்து அல்லது சிறுதுளை வழியாக சினைப்பை முற்றிலுமாகவோ அல்லது அதன் ஒருபகுதி மட்டும் நீக்கப்பட்டு, அதிலிருந்து சினை முட்டைகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே சேகரிக்கப்பட்டன.

செயற்கை கருத்தரிப்பு

அதனைத் தொடர்ந்து, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை வாயிலாக, தேர்ந்த ஊசி கொண்டு, சினைப்பையின் நுண்ணறைகளில் உள்ள ஃபாலிக்குலர் திரவமும், அதிலிருந்து கருமுட்டைகளும் சேகரிக்கப்பட்டன.

உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான லூயி பிரவுன் பிறந்ததும் இந்த வகை சிகிச்சையில் தான்.1980-களில் ஸ்கேனிங் நுட்பம் எளிமையாக்கப்பட, அறுவை சிகிச்சையின்றி, வயிற்றுப்பகுதி வழியாக (Trans abdominal) ஸ்கேனிங் மூலமாக ஊசி செலுத்தி சினைமுட்டைகளைச் சேகரிப்பதும், அதற்குப்பின் ஸ்கேனிங் நுட்பம் இன்னும் மேம்பட, தற்சமயம் மருத்துவர்கள் பயன்படுத்தி வரும் ட்ரான்ஸ் வெஜைனல் பிக்-அப் சிகிச்சையும் நடைமுறைக்கு வந்துள்ளது.

சற்று சிக்கலான பிக்-அப் சிகிச்சைகளில், டாப்ளர் (Doppler scan) எனும் ரத்த ஓட்ட ஸ்கேனிங் பலனளிக்கிறது என்கிறார்கள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர்கள்.

தரம் பிரித்து, தயார்படுத்தி.

இப்படி, பிக்-அப் சிகிச்சையில் சேகரிக்கப்பட்ட கருமுட்டைகளை, Embryologist எனும் கருவியல் நிபுணர், அதற்கான பிரத்யேக ஆய்வகத்திற்கு உடனடியாக மாற்றி, ஃபாலிக்குலர் திரவத்திலிருந்து முட்டைகளைப் பிரித்து, வெளித்தோல் போன்ற க்யூமுலஸ் (denudation of cumulus) அவற்றின் தரத்தை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நிகழ்வான கருக்கட்டல்/ கருவாக்கத்திற்கு (Fertilization) கருமுட்டைகளைத் தயார்படுத்துகிறார்.

செயற்கை கருத்தரிப்பு

பிக்-அப் சிகிச்சைக்கு ஓரிரு மணிநேரங்களுக்கு முன்னரே, ஆணின் விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தச் சேகரிப்புக்கு முன், குறைந்தது மூன்று நாள்களாவது பாலுறவைத் தவிர்ப்பது அவசியமாகிறது.

சமயத்தில் முன்னரே எடுத்து உறைநிலையில் காக்கப்பட்ட விந்தணுக்கள் (Frozen semen sample) அல்லது தானமாகப் பெற்ற விந்தணுக்கள் (Donor sperms) இதில் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, கருவாக்கம் நிகழ்வுக்கு முன்னரே, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அவற்றில் அல்லவை நீக்கி, நல்லவை மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு (sperm processing) சிகிச்சைக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி, ஏற்கெனவே தயார்நிலையில் உள்ள ஆணின் விந்தணுக்களை, ஐவிஎஃப் சிகிச்சையில் பிக்-அப் செய்த 3-4 மணிநேரத்திற்குள் நான்கைந்து கருமுட்டைகளுடன் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் ஒன்றுசேர பெட்ரி-டிஷ் (petri dish) எனும் தட்டையான கிண்ணத்தில், பிரத்யேக இன்குபேட்டரில் (Incubator) வைக்கப்படுகின்றன.

இக்‌ஸி சிகிச்சை முறையில் முந்தைய பதிவில் குறிப்பிடப்பட்டது போல, ஒற்றைக் கருமுட்டையும், ஒரே ஒரு விந்தணுவும் மூன்று மணிநேர அவகாசத்திற்குள் கருவாக்கப்படுகின்றன.

இதில் ஐவிஎஃப், இக்‌ஸி என எந்தவகையான சிகிச்சை என்றாலும், ஆய்வகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் உபயோகிக்கப்படும் திரவங்கள் ஆகியன, முற்றிலும் அப்பெண்ணின் இனப்பெருக்க அமைப்பையும், சூழலையும், தட்பவெப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை

கருவாக்க நிகழ்வின் கனியாக உருவாகும் கருவை, எம்பிரியோ (embryo) என அழைக்கும் கருவியல் நிபுணர்கள், பிக்-அப் மற்றும் கருக்கட்டல் நிகழ்ந்த 24 மணிநேரத்தில் கருவாக்கத்தை மைக்ரோஸ்கோப் மூலம் உறுதி செய்கின்றனர்.

இந்த முதல் நாளிலிருந்து ஐந்து நாள்கள்வரை, கருவின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன், கருவின் தரமும் A-D வரிசையில் வரையறுக்கப்படுகிறது.

பொதுவாக, கிரேட் ஏ என்பது அதிகத் தரம் கொண்ட கரு என்றால், கிரேட் பி சற்றே குறைவானது என்றும், கிரேட் டி என்பது மிகவும் தரம் குறைந்த கரு என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

பிக்-அப் செய்து, தரம் பிரித்து, இப்போது நல்ல கருவை ட்ராப் செய்ய வேண்டுமல்லவா? அது எங்கு, எப்போது, எப்படி என்பதை அடுத்து தெரிந்து கொள்வோம்.! பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.!

Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?

“நம் பாட்டி, அம்மா காலங்களில் உடல் உழைப்புத் தேவையான அளவு இருந்ததால், கர்ப்பக்காலத்தில் அவர்கள் உடற்பயிற்சி எனத் தனியாக எதுவும் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இன்றோ, மூளை உழைப்புப் பணிகள் பெருகியிர... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 30. எனக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி, தாம்பத்திய உறவின் போது வலி வருகிறது. ஆரம்பத்தில் வலி நிவாரணிகள் எடுத்தும் பலனில்லை. கடைசியாக ஒரு மருத்துவர் செக் செய்துவிட்டு... மேலும் பார்க்க