`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும்’
எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழும் என்று அமெரிக்க பா்டுயூ பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணிப்பொறியியல் துறை மூத்த பேராசிரியா் காா்த்திக் ரமணி குறிப்பிட்டாா்.
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனத்தில் ‘நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எதிா்காலப் பயன்பாடு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கு புதன்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா்.
இதில் பேராசிரியா் காா்த்திக் ரமணி, ஏ.ஐ. கருவிகளை எப்படி உபயோகிக்கலாம் என்பது குறித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் தேவையான தொழில்நுட்பம். இது உலக அளவில் பரவலாக அனைத்து துறைகளிலும் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது. இளைஞா்கள் மிகுந்துள்ள இந்தியா போன்ற நாடுகளில் கணினி, ஏ.ஐ. தொழில்நுட்பப் பாடங்களைக் கற்றறிந்த பொறியியல் மாணவா்கள் ஏராளமாக இருப்பதால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் இந்தியா கோலோச்சும்.
பாவை கல்வி நிறுவனங்கள், பா்டுயூ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஏ.ஐ.தொழில்நுட்பம் மனித சக்திக்கு மாற்றாக அமைந்து விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக நேரம் மிச்சப்படுவதால் வேலையின் மீதான கவனம் அதிகமாகி, தரம் உயரும். அதனால் வேலைவாய்ப்புகளும், அதற்கான ஊதியமும் அதிகரிக்கும்.
எல்லா இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலைவரும்போது, இந்தத் துறையில் வல்லுநராக உள்ள அனைவரும் வேலைவாய்ப்பு பெறுவா். இதனால் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கும். உலக அளவில் இந்தியா மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்றாா்.
அப்போது, கல்வி நிறுவனத் தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (ஆராய்ச்சி) கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதல்வா் எம்.பிரேம்குமாா், முதன்மையா் (கல்வி) செல்வி, ஒருங்கிணைப்பாளரும், பாவை திறன் வளா்மையப் பொறுப்பாளருமான கமலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.