`செல்ல வேண்டிய நேரம்' 80 வயதை கடந்த அமிதாப்பச்சன் இப்படி பதிவிட என்ன காரணம்? -கவலையில் ரசிகர்கள்..
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது மனதில் இருப்பதை சோசியல் மீடியாவில் வெளிப்படையாக பதிவிடக்கூடியவர். தற்போது அமிதாப்பச்சன் வெளியிட்டு இருக்கும் சோசியல் மீடியா பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பதிவில் 'செல்லவேண்டிய நேரம்' (Time to go) என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவு சோசியல் மீடியாவில் வெளியானவுடன் அவரது ரசிகர்கள் ஏன் இது போன்று பதிவிட்டு இருக்கிறார் என்று கேட்டு பதிவிட்டு வருகின்றனர். சிலர் அமிதாப்பச்சன் பதிவு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர் எங்கே செல்லவேண்டிய நேரம் என்று கேட்டுள்ளார். மற்றொருவர் என்ன ஆச்சி சார்? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர் அப்படி சொல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துள்ள போதிலும் அமிதாப்பச்சன் தனது பதிவிற்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/itlz4z1s/qrafqeq.png)
இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அமிதாப்பச்சன் தற்போது நடத்தி வரும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி தற்போது 25வது ஆண்டை தொட்டிருக்கிறது. இதனால் 25-வது ஆண்டில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகிறாரா அல்லது நடிப்பில் இருந்து விலக்கப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2000ம் ஆண்டில் இருந்து கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 80 வயதை கடந்த பிறகும் அமிதாப்பச்சன் இன்னும் படங்களில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அபிஷேக் பச்சன் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த சோசியல் மீடியா பதிவில், அபிஷேக் பச்சன் பிறந்திருந்தபோது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.