சேறும் சகதியுமாகிப் போன தற்காலிகப் பேருந்து நிலையம்!
புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பின்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் இரு நாள்களாக பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறிப் போனது.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமாா் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றிவிட்டு கட்டுவதற்காக ரூ. 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பேருந்து நிலையம் பின்புறமுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வீதம், 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, ரூ. 6 லட்சம் மாநகராட்சியிலிருந்து செலுத்தப்பட்டது.
இந் நிலையில் கடந்த ஜனவரி இறுதியில் முதல் கட்டமாக திருச்சி பேருந்துகளை மட்டும் தற்காலிகப் பேருந்து நிலையதில் நிறுத்தப்பட்டது.
பிப்ரவரி இறுதி முதல் அனைத்துப் பேருந்துகளும் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நின்றே செல்கின்றன.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக புதுகையில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தற்காலிகப் பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்போதே, இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் என்றும் பலரும் சுட்டிக்காட்டினா். மாநகராட்சி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
